தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் தென் மேற்கு பருவக் காற்று காரணமாக கன்னியாகுமரி , நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப் போவதாக சென்னை வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் வழக்கத்தைவிட சற்று முன்பாக தொடங்கியது. இந்த பருவமழையால் கேரளாவிலும், கர்நாடக மாநிலத்தில் சில பகுதிகளிலும் இன்று வரை கனமழை கொட்டி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி , கே. ஆர்.எஸ் அணைகள் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக முழு கொள்ளவிலேயே உள்ளது. அங்கிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணையும் தற்போது நிரம்பி வழிகிறது.

இதே போல் கேரளாவிலும் தென் மேற்கு பருவமழையால் இந்த ஆண்டும் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன, ஆசியாவிலேயே மிகப் பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நிரம்பியுள்ளது.

தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்நது ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளுமே நிரம்பியுள்ளன.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை அடித்து ஊத்தப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணிக்கு  தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் தமிழகத்தில் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும்,  தென் கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக குமரி மாவட்டம் தக்கலையில் 15 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.