அசானி புயல் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி தீவிர புயல் தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவிலும், மாசிலிப்பட்டினத்திற்கு தெற்க்கே சுமார் 200 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு ஆந்திர கடற்கரைக்கு அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்ல கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் 10 மற்றும் 11 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுபட்டு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலப்பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழைபெய்யக் கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மே 12 முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
