heavy rain duraisamy sub way closed guindy kathipara over bridge

சென்னையில் இன்று மதியம் 3 மணி முதல் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. 

குறிப்பாக, ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது. ரயில்வே சப் வே சுரங்கப் பாலங்களில் திடீரென தண்ணீர் பெருமளவு தேங்கியது. 

சென்னையின் பிரதான பகுதியான தி.நகர் சுரங்கப்பாதை மற்றும் சைதையில் உள்ள துரைசாமி சப்-வேயில் நீர் பெருகியதால், அது மூடப்பட்டது. எனவே அந்த வழியாக மாம்பலம் பகுதிக்குச் செல்பவர்கள் பெரிதும் திண்டாடிப் போயினர். சாலையில் செல்லவும் வழியின்றி பலரும் ஒரே பாதையில் திரும்புவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதுபோல், மவுண்ட் ரோடை ஒட்டிச் செல்லும் பரங்கிமலை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் எல்லாம் நீர் நிரம்பி ததும்புவதால், அவற்றின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னையின் முக்கிய சாலைகளை இணைக்கும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், அந்த இடத்தில் பெரும் போக்குவரத்துச் சிக்கலே ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் மழை நின்ற பிறகே போக்குவரத்து சரியாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.