தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை...!
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த வாரம் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது. இதனால், தென் மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதே நேரம், சென்னையில் பலத்த காற்று வீசி வந்தது.
இந்நிலையில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில், இன்று முதல், 24-ம் தேதி வரை, கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் 20 மி.மீ. மழை பதிவானது.