Heavy and alangatti rain in south district
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தாலும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை அப்பகுதியை குளு குளுவாக்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்யததால் குழந்தைகள் குஷியாகினர்.
கடந்த வாரம் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது, வரும் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருப்பதால் பொதுமக்கள் கடும் வெயிலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த வெயிலை சமாளிக்கும் விதமாக தென் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றம் மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
குளு குளு கொடைக்கானலில் பெய்த மழை அந்த மலையை மேலும் குளுமையாக்கியது.. மதியம் 12 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அதனை தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது.

பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை 4.30 மணி அளவில் வானில் கார்மேக்கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து பலத்த காற்று வீச தொடங்கியது. பின்னர் 5.15 மணிக்கு சூறா வளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு தான் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் திண்டுக்கல் நகர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர். இந்த மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.

கொடைரோடு பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. அதேபோல வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் மாலை 4.30 மணி அளவில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
