மக்கள் அலட்சியமே காரணம்.. விரைவில் கொரோனா கட்டுபாடுகள் அமல்..? சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை..
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் என்றும் விரைவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் என்றும் விரைவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 92 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்தமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 320 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஏறுமுகமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று திடீரென 13 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக கடற்கரை செல்வதற்கு தடை, நாளை இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடப்படவுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒமைக்ரான் பரவல் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உலக அளவில் பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இல்லை என்பதால் மக்களிடம் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை மக்கள் அலட்சியமாக எண்ண வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்று மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் முழுமையாக அணிவதில்லை. குறிப்பாக அதிகாரிகள் யாரையாவது பார்த்தால் மட்டுமே பொது இடங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் சரிசெய்து கொள்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். கட்டுப்பாடு என்பது அதிகாரிகளுக்கு அல்ல மக்களுக்கு என்பதை உணர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தினோம். நோய்க் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடித்ததே இதற்குக் காரணம். தற்போது அதனை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.