நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது.  இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர்.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து பேசினார்.

அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசின் சார்பில் அவசர சட்ட நகல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காலதாமதம் காரணமாக ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் அவசர சட்ட நகல் அளித்துள்ளதாகவும் 85 சதவீத அரசாணையிலும் தமிழகத்திற்கு சாதகமாக சூழ்நிலை இல்லை என்பதால் நடப்பு கல்வியாண்டில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

நடப்பாண்டில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதால் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.