தமிழகத்தில் மர்ம காய்ச்சல் என்பதே கிடையாது. டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். குறிப்பாக அனைவரும், டெங்கு காய்ச்சலால் இறந்ததாக, அவர்களது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதைதொடர்ந்து, இன்று ஒருநாள் மட்டும் நாமக்கல், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நல்ல தண்ணீரில் உருவாக்கக்கூடிய டெங்கு கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு என்ற நிலை இருக்கக்கூடாது. 10 நாட்களுக்குள் காய்ச்சல் பரவுவது 100 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் என்பதே கிடையாது. தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. காய்ச்சல் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 10 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.