ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை, பெருங்குடியில் மான்ஃபோர்ட் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் ஜெயபாலன் இருந்து வருகிறார். 

இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பதினொன்று வயது சிறுமி, 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அந்த சிறுமி, கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்குச் செல்ல மறுத்து வந்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் ஜெயபாலன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், பாதிரியார் ஜெயபாலன் மீது துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
தகவலறிந்து வந்த போலீசாரிடம் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.