head mistress suspended for late coming to school

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கதிரவன் அதிரடி உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவசமுத்திரம், கட்டிகானப்பள்ளி ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனை ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையொட்டி தேவசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளிக்கு உரிய நேரத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வாணி வராதது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை வாணியை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆட்சியர் கதிரவன் அதிரடியாக உத்தரவிட்டார்

அதனைத் தொடர்ந்து பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டு பள்ளி அருகில் இடியும் நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டித்தை இடிக்க அவர் உத்தரவிட்டார்.

பின்னர் வீடு, வீடாகச் சென்று குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என்பதையும், வீட்டின் மேல் தளங்களில் தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை தூய்மை பணியாளர்களைக் கொண்டு உடனடியாக அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்பட்டுள்ளதை உடனடியாக சுத்தம் செய்யவும், மருத்துவமனைக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டு அசத்தினார்.

இந்த ஆய்வின்போது நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் அசோக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, பிரசன்னா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்தி மற்றும் சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.