திருவள்ளூர் அருகே லாரி மோதியதில், கை, கால்கள் நசுங்கிய 5 மாணவிகளுக்குத் தரமான சிகிச்சைக் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தினர்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு, நெடுஞ்சாலையோரம் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் வியாழக்கிழமை மாலை, பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு பேருந்திற்காகக் காத்திருந்தனர்.

மறுபுறம், திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி சரக்குந்து (லாரி) ஒன்றுச் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென எதிரே இரு சக்கர வாகனத்தில் மாணவர்கள் வந்ததால் நிலைதடுமாறினார் லாரி ஓட்டுநர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீதும் மோதிவிட்டு சாலையோர இரும்பு தடுப்பில் மோதி நின்றது.

இதில், கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் ஷீபா (14), சௌமியா (15), சுனிதா (12), பாரதி (14), சைனி (13) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில், மூன்று மாணவிகளின் இரு கால்களும், இரண்டு மாணவிகளின் கைகளும் நசுங்கி துண்டானது. அருகிலிருந்தவர்கள் மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்த தகவலறிந்த கனகவல்லிபுரம் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு கை, கால்கள் சிதைந்த நிலையில் கிடந்த மாணவிகளை கண்டு கதறி அழுதனர்.

தொடர்ந்து 5 மாணவிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த தனியார் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் காவல்துறையினர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் சமாதானமாகாததால், அவர்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தி மறியலைக் கலைத்தனர்.

இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..