Haj Subsidy Withdrawn Government Says Muslims Didnt Benefit From It

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, இந்த வருடம் ஹஜ் பயணம் செல்வோருக்காக அரசு வழங்கும் மானியம் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதே நேரம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது அரசு. 

உலகம் எங்கிலும் இருந்து சௌதி அரேபியாவுக்கு முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் இருந்தும் கணிசமான பயணிகள் சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செல்கின்றனர். ஆனால் இந்த முறை இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் செல்வோரின் எண்ணிக்கை 1.75 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவில் இருந்து இவ்வளவு அதிகமான பேர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. 

கடந்த 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022ஆம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதை அடுத்து ஹஜ் பயணம் மேற்கொள்வது குறித்த புதிய கொள்கையை உருவாக்க ஒரு குழுவை அமைத்தது மத்திய அரசு.

சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு கடந்த 2017 ம் வருடம் 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். 

ரத்து செய்யப் படும் மானியத் தொகை, இனி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்படும். ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி மத்திய குழு வழங்கிய வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சமாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டது. கடல் வழி யாத்திரையை சௌதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.

கப்பல் வழியாக ஹஜ் புனித பயணம் தொடர்பாக சௌதி அரேபியா அரசுடன் இந்திய அரசு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கிறார்கள்.