சென்னையில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அதிகாரிகள் மற்றும் நபர்கள் குறித்து மாதவராவிடம் சிபிஐ வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது.

சென்னையில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அதிகாரிகள் மற்றும் நபர்கள் குறித்து மாதவராவிடம் சிபிஐ வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. 

தடையை மீறி இந்த வகை புகையிலை பொருட்கள் தமிழகத்தில் சட்ட விரோதமாக தாராளமாக புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2016-ல் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் அமைச்சர், போலீஸ் அதிகாரிகளுக்கு மாதமாதம் லஞ்சமாக பணம் கொடுத்திருந்த விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டைரி உடனடியாக டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

தொடர்ந்து, லஞ்சம் வாங்கி குட்கா ஆலை செயல்பட துணையாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி திமுக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்பு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றியது. 

இதன்தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையை தொடங்கினர். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து குட்கா வழக்கில் கைதான குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவிடம் நேற்று சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக துருவி, துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மாதவராவ் அளித்த தகவலின் படி லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க சிபிஐ அதிரடியாக முடிவு செய்துள்ளது.