அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பணம் பெற்றதாக என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், குட்கா முறைகேடு விவகாரத்தில் பணம் பெற்றதையும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை தொடங்கினர். அதே நேரத்தில் முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் வீட்டிலும் சோதனை தொடர்ந்தது. குறிப்பாக தமிழக காவல்துறையில், முதல்முறையாக டிஜிபி வீடு உள்பட 40க்கு மேற்பட்டோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை மற்றும் 40 இடங்களுக்கு மேல் நேற்று டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது. தொடர்ந்து இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட சோதனையில், சென்னையை சேர்ந்த குட்கா புரோக்கர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

 

அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள், ராஜேஷ் மற்றும் நந்தகுமார் என்கிற குட்கா புரோக்கர்கள் 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் 2 பேரையும், டெல்லி கொண்டு சென்று, மேலும் விசாரணை நடத்த இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் எத்தனை தலைகள் உருளும் என பொதுமக்கள் எதிரில் எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.