விருதுநகர்,

விருதுநகர் அருகே, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி நான்கு வழிச்சாலையில் சாக்கு மூட்டையில் வீசிச் சென்றுள்ளனர். கொலையுண்ட இளைஞர் யார் என்று தெரியவில்லை.

விருதுநகருக்கும், கள்ளிக்குடிக்கும் இடையே நான்கு வழிச்சாலையில் நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகில் வெள்ளிக்கிழமை காலை சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் யாரேனும் ரூபாய் நோட்டுகளை சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றிருக்கலாமோ என்று கருதி அந்த வழியாக வந்த ஒருவர் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்துள்ளார்.

அப்போது சாக்கு மூட்டையில் ஒரு கையும், இரண்டு கால்களும் இரத்தக்கறை படிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்தார்.

பின்னர் இதுகுறித்து அந்த நபர் கள்ளிக்குடி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையில் இருந்த கை–கால்களை கைப்பற்றினர்.

சம்பவ இடத்தை மதுரை மாவட்ட காவல் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி பார்வையிட்டார். கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டி விலக்கு அருகே சாலையில் ஒரு வாலிபரின் தலை மட்டும் தனியாக கிடப்பதாக கள்ளிக்குடி காவலாளருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவலாளர்கள் அங்கு சென்று தலையை கைப்பற்றினர்.

இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் விருதுநகர்–சாத்தூர் இடையே மருளூத்து விலக்கு அருகே சாலையில் தலை, கை, கால்கள் எதுவும் இல்லாமல் வாகனங்களால் நசுங்கிய நிலையில் இளைஞர் உடலின் ஒரு பகுதி கிடப்பதாக சூலக்கரை காவலாளருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற காவலாளர்கள் உடல் பகுதியை கைப்பற்றினர்.

அதன் அருகில் சாலை ஓரத்தில் ஆண் உறுப்பும் நசுங்கிய நிலையில் கிடந்தது.

உடலின் ஒரு பகுதியுடன் கிடந்த சாக்குமூட்டை மீது அந்த வழியாக வந்த வாகனங்கள் ஏறி சென்றதால் சாக்குமூட்டை சேதம் அடைந்து உடல் பகுதி சாலையில் சிதறிக் கிடந்தது.

கொலையுண்ட இளைஞரின் உடலை கூறு போட்டு உடலின் பல பகுதிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி நெடுஞ்சாலையில் பல இடங்களில் வீசி சென்றுள்ளதை உணர்ந்த காவலாளர்கள் விருதுநகர்–சாத்தூர் இடையே வேறு இடங்களில் ஏதேனும் சாக்கு மூடை கிடக்கிறதா என தேடத் தொடங்கினர்.

அவ்வாறு காவலாளர்கள் தேடிச் சென்ற போது மருளூத்து விலக்கில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள எட்டிநாயக்கன்பட்டி விலக்கு சாலையில் ஒரு சாக்கு மூடை கிடந்ததை கண்ட காவலாளர்கள் அதனை அவிழ்த்துப் பார்த்த போது அதில் உடலின் மற்றொரு பகுதி இருந்தது தெரியவந்தது.

கள்ளிக்குடியில் இருந்து சாத்தூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் தான் உடலின் அத்தனை பாகங்களும் தனித்தனியாக கிடந்துள்ளன. இதை பார்க்கும்போது ஒரு கும்பல் திட்டமிட்டு கொலை சம்பவத்தை முடித்து விட்டு கொலையுண்டவரின் உடலை தனித்தனியாக வெட்டி அதை தனித்தனியாக சாக்குமூட்டையில் கட்டி நெடுஞ்சாலையில் வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது.

காவலாளர்கள் சாலையில் கிடந்த உடலின் பாகங்களை சேகரித்து அவை அனைத்தும் ஒரே நபரின் உடல் உறுப்புகள் தானா என்பதை கண்டறிய பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கிடந்த உடலின் பாகங்களை வைத்து பார்க்கும் போது கொலையுண்ட நபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இளைஞரை கொன்று உடலை கூறுபோட்டு சாலையின் பல இடங்களில் வீசி சென்ற சம்பவம் காவலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலையுண்ட இளைஞர் யார்? அவரை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்று காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.