gun shot in vellore

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சசிகுமார் (25). பெங்களூருவில் உள்ள தனியார் ஆப்செட் பிரின்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் சசிகுமார், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றார்.

நேற்று இரவு சசிகுமார், வீட்டில் சாப்பிட்டு முடித்து இருந்தார். இரவு சுமார் 11 மணியளவில், நண்பர்களை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அங்கு இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து மர்மநபர்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதில், அலறி கூச்சலிட்டபடி சசிகுமார், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். அதற்குள் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சசிகுமாரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சசிகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

புகாரின்படி பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.