கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் காவலாளியை தாக்கிவிட்டு உண்டியில் இருந்த நகை–பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் புகழ் பெற்ற செம்புலிங்க ஐய்யனார் என்கிற செம்பையனார் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (45) என்பவர் பூசாரியாகவும், இரவு நேரங்களில் காவலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சண்முகம் (45) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இரவிச்சந்திரன் கோவிலில் பூசைகளை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவில் கதவை பூட்டி விட்டு வெளியே காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்ட இரவிச்சந்திரன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது, கோவில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தார்.

உடனே, அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டபடி, மர்மநபர்களின் திருட்டு முயற்சியை தடுக்க முயன்றுள்ளார். இதில் கோவமடைந்த மர்ம நபர்கள் இரவிச்சந்திரனை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இரவிச்சந்திரன் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

இதையடுத்து மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, அடியார்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை தூங்கி எழுந்த சண்முகம் கோவிலுக்குள் சென்றார். அப்போது அங்கு இரவிச்சந்திரன் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சண்முகம் கோவில் நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதையறிந்த கோவில் நிர்வாக அதிகாரி கொளஞ்சி ஊ.மங்கலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே கோவிலில் கொள்ளை நடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் செவ்வாய்க்கிழமை இரவு விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இரவிச்சந்திரனை தாக்கி உள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.2 இலட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் கோவில் பூசாரியை தாக்கி உண்டியலில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.