GST motion in tamilnadu aassembly

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப் பேரவை தொடங்கிய முதல் நாளான கடந்த 14 ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி மசோதா இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக, சட்டப் பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி தொடங்கியது..

சட்டப் பேரவைக் கூட்டம்3 நாட்கள் நடைபெற்ற நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூன் 14 அன்று, தமிழக சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.


இந்நிலையில், இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதத்தின் போது திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச உள்ளார்.

இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதால் சட்டப் பேரவையில் இது தொடர்பாக அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.