GST is worse than a snake

பாம்பு கடிக்கு தயாரிக்கப்படும் மருந்து பாம்பிடம் இருந்து எடுக்கப்படும் விஷத்தைக் கொண்டே உருவாக்கப்படுகிறது. இந்த விஷமுறிவைக் கொண்டுதான் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் நிலையில், விஷமுறிவு மருந்தை உண்டாக்க பயன்படுத்தப்படும் பாம்பின் விஷத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பது நாகப்பாம்பின் விஷத்தைவிட கொடுமையானது என்று பாம்பு பிடிப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

நாகப்பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளிடம் இருந்து எடுக்கப்படும் விஷம் ரூ.2,300-க்கும், கட்டுவிரியன் ரூ.850, சுருட்டை விரியனுக்கு ரூ.300 விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

மேலை நாடுகளில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கிறார்கள். ஆனால், இயற்கையான இடங்களில் வாழும் பாம்புகளின் விஷம்தான் மருந்து தயாரிக்க சிறந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், தென் இந்தியாவில் பாம்பு விஷம் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் தமிழகத்தில். இந்த நிலையில், பாம்பு விஷங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது வருத்தமாக உள்ளதாக பாம்பு பிடிப்போர் சங்க உறுப்பினர் செல்லப்பா, வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி. வரை கட்ட வேண்டி உள்ளது. பாம்பு பிடித்து வருபவர்களுக்கு கொடுக்கும் கட்டணத்தில்தான் இந்த தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. பாம்புக்கு கடிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், மருந்து நாங்கள்தானே தர வேண்டும். பிரச்சனையை உணர்ந்து ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பாம்பு பிடிப்போர் சங்கம் கூறுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தானே...‘