களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்.! மோடி முதல் ஸ்டாலின் வரை வாழ்த்து
பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் மக்கள் சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் கொண்டாட்டம் - மோடி வாழ்த்து
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், எனது அமைச்சரவை சகாவான ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது. சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்என கூறியுள்ளார்.
ஆளுநர் பொங்கல் வாழ்த்து
தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்தில், இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது. பொங்கல் உணர்வு அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும் என கூறியுள்ளார்.
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
குன்றா நலமும், குறையா வளமும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்தில், உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.