தஞ்சாவூர்
 
தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த பாட்டியை கொடூரமாக கொன்றுவிட்டு 9¾ சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் வலைவீசு தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தெற்கு சேனியத் தெருவைச் சேர்ந்தவர் ஹஜீதாபீவி (69). இவரது கணவர் முகமது சாலிக் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவரது ஒரே மகன் சபீர்முகமது (40). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 8 சகோதரிகள் உள்ளனர்.

வீட்டில் தனியாக வசித்து வந்த ஹஜீதாபீவி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது தங்கை மகபுனிசா அக்கா ஹஜீதாபீவிற்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் ஆண் குரல் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகபுனிசா தனது அக்கா வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்து அக்கா வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது, குளியல் அறைக்குச் செல்லும் வழியில் ஹஜீதாபீவி வாய், மூக்கு, காதில் இரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்கதவு திறந்து கிடந்ததால் உடனடியாக அவர்கள் இதுகுறித்து காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலாளர்கல் ஹஜீதாபீவி வீட்டிற்குள் சென்றுப் பார்த்தனர்.

அப்போது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கழிவறைக்கு செல்லும் வழியில் ஹஜீதாபீவி வாய், மூக்கு, காதில் இரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தார். அவரது உடல் கிடந்த அருகில் தலையணை ஒன்று கிடந்தது.

தலையணையை பயன்படுத்தி கொலையாளிகள் ஹஜீதாபீவியை கொலை செய்திருக்கலாம் என்று காவலாளர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், ஹஜீதாபீவி அணிந்து இருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட 9¾ சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், ஹஜீதாபீவியின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பீரோவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காவல் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து திருவிடைமருதூர் காவலாளர்கள் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பாட்டியை கொன்று மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.