அனைத்து போலீசாரும் சீருடையுடன் இன்று காலை 7 மணிக்கு பணிக்கு வர உத்தரவு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து போலீசாரும் சீருடையுடன் இன்று காலை ஆஜராக தமிழக போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிர சிகிச்சைகள் பலனாக, முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் தேறி வந்த நிலையில், இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தடைந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சரியாக இரவு 12 மணிக்கு வந்த அவர்

அங்கு மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் கலந்து ஆலோசித்து 10 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டார்.

இதைதொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து போலீசாரும் சீருடையில், இன்று காலை 7 மணிக்கு ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள் முன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, ஏ.டிஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் பணிக்கு உடனடியாக திரும்ப உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனையின் நான்கு வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்கலில் தேவையற்ற புரளிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து அனைத்து சமூக வலைதளங்களையும் கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும் செய்தியான, துணை ராணுவப்படையினர் யாரும் தமிழகத்துக்கு வரவில்லை அந்த செய்தி பொய்யானது என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.