Govt Employees strike
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல்கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஏற்கனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மாநில முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 15–ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் நடத்தப்பட்டது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி இன்று முதல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்பட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றன. இதனால் அரசுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் அரசு நிர்வாகமும் முற்றிலும் முடங்கும் என்றும் தெரிகிறது.
அதே நேரத்தில் பள்ளி மாணவ–மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணியை கருத்தில் கொண்டு ஆசிரியர் ஊழியர்கள் சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
