Governor should not have done this in the case of Nirmaladevi - best Ramasamy ...
கோயம்புத்தூர்
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தவறான முன்னுதாரணம் என்று கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறினார்.
கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த சட்டப்பிரிவில் உடனடி கைது கூடாது. ஜாமீன் உடனடியாக தர வேண்டும் என்று தற்போது தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்தச் சட்டப்பிரிவு 90 சதவீதம் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதன்மூலம் எந்த விசாரணையும் இல்லாமல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொய் வழக்குகளால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருடத்திற்கு 150 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முன்பு போடப்பட்டது. எங்களது கட்சியின் போராட்டம் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்தது.
எங்களை பொறுத்த அளவில் வன்கொடுமையில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தவறு என்று கூறமாட்டோம். ஆனால், இந்த சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம்.
தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது. அதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சினிமா நடிகர்கள் மார்க்கெட்போன பிறகு அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறோம்.
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநரின் விசாரணை சட்டத்திற்குட்பட்டு இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சனைகளில் ஆளுநரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தவறான முன்னுதாரணம்..
அத்திக்கடவு - அவினாசி திட் டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தொடங்கி வைக்க வேண்டும்.
கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனம் ஒருமுறை செல்ல ரூ.85 வசூலிக்கிறார்கள். இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
வருகிற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்" என்று அவர் தெரிவித்தார்..
