Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் முன்னேற்றத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழகம்… ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!!

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாகவும், பெண்களின் பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

governor said tamilnadu is pioneer in womens advancement
Author
Madurai, First Published Dec 16, 2021, 6:29 PM IST

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாகவும், பெண்களின் பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைகழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்தாண்டு மொத்தம் 18,000 மாணவிகள் பட்டம் பெறும் நிலையில் அவர்களில் 549 மாணவிகளுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருகின்றனர்.

governor said tamilnadu is pioneer in womens advancement

இந்தியாவில் பிற மாநிலங்களை விடவும் தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. பெண்கள் விடுதலைக்காக போராடிய மகாகவி பாரதியாரின் எண்ணம் போல் ஆணுக்கு பெண் சமம் என்கிற நோக்கம் முழுமையடைய வேண்டும். பெண்களின் பொருளாதார பாதுகாப்பையும், சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நம் முன் உள்ளது. படித்து பட்டம் பெற்று விட்டு பல பெண்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி குடும்ப தலைவியாகி விடுகிறார்கள். குடும்ப தலைவியாக இருப்பதும் பெரிய பொறுப்பு தான். இருந்தாலும், அவர்களுடைய பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

governor said tamilnadu is pioneer in womens advancement

அவரை தொடர்ந்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் வெறும் 27.1 சதவிகிதம் தான், ஆனால் தமிழகத்தில் 51.4 சதவிகிதமாக நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. உயர்கல்வி துறையில் முதலமைச்சர் தனி ஈடுபாடு கொண்டுள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தான் 21 புதிய கல்லூரிகள் துவங்க முதலமைச்சர் ஆணையிட்டு உள்ளார். தமிழை வளர்ப்பதற்காக அரசு தேர்வுகளை தமிழில் எழுதவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளை உங்கள் சொந்த மொழியில் பேசுங்கள் என அமித்ஷா அறிவுறுத்தினார். அதனால் தான் நான் இங்கு தாய் மொழி தமிழில் பேசுகிறேன்.மாநில மொழிகள் வளர்க்கப்பட வேண்டும்.தமிழ் மொழி வளர வேண்டும் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios