Senthil Balaji and Ponmudy : செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நாளை பதவி ஏற்க இருக்கிறார்.

Senthil Balaji and Ponmudy : தமிழகத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளார். இதே போன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த அமைச்சர் பொன்முடியும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தான் அந்த கடிதத்தை ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய அமைச்சராக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏவான மனோ தங்கராஜ் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்க முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நாளை 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஏற்கனவே மனோ தங்கராஜ் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், அவரது அந்தப் பதவியிலிருந்து அவர் தூக்கப்பட்ட நிலையில் மீண்டும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு:

எஸ் எஸ் சிவசங்கர் – போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்

எஸ் முத்துசாமி – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

ஆர் எஸ் கண்ணப்பன் – வனத்துறை மற்றும் காதி

இதில் ஆர் எஸ் கண்ணப்பன் இதற்கு முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அவருக்கு வனத்துறை கொடுக்கப்பட்டு மனோ தங்கராஜிற்கு மீண்டும் பால்வளத்துறை கொடுக்கபட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.