தர்மபுரி

விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கந்தசாமி, மாதேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாது, காதர்மொய்தீன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

“தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் நதிநீர் உரிமையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நியாயமான நிவாரண உதவி வழங்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், மஞ்சளுக்கு ரூ.60 ஆயிரமும், இதர பயிர்களுக்கு ரூ.30 ஆயிரமும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள மத்திய அரசு உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்களாகவும் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.