Asianet News TamilAsianet News Tamil

டல் அடிக்கும் அரசு அலுவலகங்கள்; காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள்…

Government offices in Tallinn feet Government employees on indefinite strike
government offices-in-tallinn-feet-government-employees
Author
First Published Mar 15, 2017, 7:04 AM IST


தஞ்சாவூர்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதால் தஞ்சையில் அரசு அலுவலகங்கள் டல் அடிக்கிறது.

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்பட 1200 பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

“ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்டபடி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவி இயக்குனர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அளவீட்டிற்கான நுட்ப மதிப்பீட்டை ரூ.3 இலட்சமாக உயர்த்த வேண்டும்.

பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை நியமித்திட உள்ள தடையினை நீக்கி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்களை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்ட ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்க தலைவர் திருமாறன், கார்த்திக், சுரேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios