மதுரை

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பெயர் பலகைகளில் தமிழில் தான் பெயர் எழுத வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தால், பெயர் பலகையில் தமிழில் பெரிய எழுத்தில் எழுதிவிட்டு, பிற மொழிச் சொற்களை சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்ற அரசாணை 1987–ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் பெரிதாகவும், தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியை அவமதித்து வருகின்றனர்.

எனவே, தமிழை கௌரவிக்கும் விதமாகவும், தமிழ்மொழி மீதான நாட்டத்தை வளர்க்கும் வகையிலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளில் அரசாணையில் கூறப்பட்டுள்ள அளவில் பெயரை எழுத வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இந்த உத்தரவை பின்பற்றாத பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் இறுதியில், “பெயர் பலகைகளில் தமிழை பிரதானமாக பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.