Asianet News TamilAsianet News Tamil

அரசே செய்தாலும் தவறு தவறுதான் - அகற்றப்பட வேண்டும் என்கிறார் விவசாய சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு...

government makes mistakes means mistake Iyakkanu says
government makes mistakes means mistake Iyakkanu says
Author
First Published Apr 20, 2018, 8:45 AM IST


நாமக்கல்

ஏரி மற்றும் குளங்களில் அரசோ, விவசாயிகளோ அல்லது யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என்று நாமக்கல்லில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு தெரிவித்தார்.

"நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய கோரியும்" தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஐயாகண்ணு கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நேற்று 50-வது நாளாக நாமக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். சேந்தமங்கலம், இராமநாதபுரம், புதன்சந்தை, காந்திபுரம், காரவள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி உள்பட நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். 

அப்போது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியத்தை சந்தித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐயாக்கண்ணு கூறியதாவது:-

"உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி நீர் வழங்கப்படாததாலும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கொடுக்காததாலும் விவசாயிகள் விவசாயத்தைவிட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

18-வது மாவட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இடும்பன் ஏரி, வாழவந்தி ஏரி மற்றும் பொம்மசமுத்திரம் ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு தூர் வார வேண்டும் எனவும், 

காவிரியில் களிமேடு என்ற இடத்தில் தடுப்பனை கட்ட மதிப்பீடு செய்துவிட்டு, அதை அணுச்சம்பாளையத்தில் பேப்பர் மில் இருக்கும் இடத்தில் கட்ட ஏற்பாடு நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு மற்றும் நஷ்டஈடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏரி மற்றும் குளங்களில் அரசோ, அல்லது யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவைகளை கேட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்" என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios