சென்னை கொடுங்கையூரில் சிப்ஸ் கடையில் நள்ளிரவு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சென்னை கொடுங்கையூர் அருகே உள்ள  பேக்கரி ஒன்றில் நேற்று இரவு 11.30 மணியளவில் பணியாளர்கள்  சிப்ஸ்  போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. 

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பக்கத்து அறையில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த, சிலிண்டர்களுக்கும் தீ பரவியதில் அவை வெடிக்கத் தொடங்கின. இதில் தீயணைப்பு வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஒரு தீயனைப்பு வீரர் பலியாகியுள்ளார். மேலும் 7 போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது கடைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின.

இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் “தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின்  மகனுக்கு அரசு வேலை மற்றும் அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால் உயிரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டு உள்ளார்.