Asianet News TamilAsianet News Tamil

சுவர் விளம்பரத்துக்காக அரசியல் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்படும் அரசு கல்வி நிறுவனங்கள்; மக்கள் வேதனை...

Government institutes occupied by political parties for wall advertising People are suffering ...
Government institutes occupied by political parties for wall advertising People are suffering ...
Author
First Published Nov 20, 2017, 7:54 AM IST


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில்  அரசு கல்வி நிலையங்களின் சுற்றுச் சுவர்களை விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பதால் நகரின் பொலிவு இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .

அரசியில் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் முதல் கட்சியின் பொதுக் கூட்டம் வரை எவ்வளவு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அவை அனைத்திற்கும் டிஜிட்டலில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்படுகின்றன. வெவ்வேறு அளவு, புதுபுது வடிவம் என பெரிய பெரிய பதாகைகளை வைத்து நடைபாதையினருக்கு இடையூறாக வைப்பர்.

எவ்வளவு பெரிய பெரிய பதாகைகள் வைத்தாலும் இன்னமும் அரசியல் கட்சிகள் சுவற்றில் விளம்பரங்கள் செய்யதான் இன்னமும் பெரும் முக்கியத்துவத்தை கொடுக்கின்றன.

சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கு சுவர் விளம்பரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் விதித்த பல்வேறு நிபந்தனைகளால்  பெரிய அளவில் சுவர் விளம்பரம் செய்யப்படுவதில்லை.

ஊரகப் பகுதிகளில் வீட்டின் உரிமையாளரிடம் அனுமதிபெற்றுத்தான்  சுவர் விளம்பரம் செய்ய முடியும் என்பதால் அரசியல் கட்சிகள் இதற்காக அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை.

தற்போது தேர்தல் காலம் இல்லை என்றாலும்,  புதுக்கோட்டை நகரிலுள்ள சில முக்கியப் பகுதிகளில் கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்கள் அரசியல் கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளிச் சுற்றுச்சுவரிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களின் சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்வதற்குத் தயங்கும் அரசியல் கட்சிகள்,  அரசு கல்வி நிறுவனங்களின் சுற்றுச்சுவரைத் தாராளமாக ஆக்கிரமிப்பு செய்து விளம்பரம் செய்து வருகின்றன.

புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டையொட்டி   அதிக பொருள் செலவில் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி தலைமை மருத்துவமனையின் தென்புறச் கவரில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்போது சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இதுபோல,  மகளிர் கல்லூரி வாசலிலும் சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழும் பொது அலுவலகக் கட்டடம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்தான்.  இந்த அலுவலக வளாகத்திலும்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.  

நகரை அழகுப்படுத்தும் முக்கிய பகுதிகளின் சுவர்கள், வளாகங்கள் விளம்பரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும்போது,  இதை சீர் செய்ய உடனடி நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்  இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தும்போதுதான்  அரசுச் சுவர்கள் பொலிவு பெறும்.  இதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுத்தால்தான் புதுக்கோட்டை நகரம் பொலிவை நோக்கிப் பயணிக்கும். இல்லையென்றால் மேலும் பல இடங்களின் சுற்றுச்சுவர்கள் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios