Government inspector general investigator sudden examination He examined and tested the food of the patients
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் சுரேஷ்குமார் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்தூ தர சோதனையும் நடத்தி நோயாளிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் சுரேஷ்குமார் திடீரென ஆய்வு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கண் சிகிச்சைப்பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, காசநோய் பிரிவு, மருந்தகம் மற்றும் மருந்துகள் பாதுகாப்பு அறை, நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்யும் பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நோயாளிகளுக்கு படுக்கை விரிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அணியும் மேலங்கிகளை எந்திரம் மூலம் சலவை செய்து உலர்த்தப்படும் கருவிகளை பார்வையிட்டார்.
நாளொன்றுக்கு சலவை செய்யும் எண்ணிக்கை குறித்தும், எந்திரங்களை கையாளும் முறை குறித்தும், பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனையை சுத்தமாக வைத்து கொள்ளவும், சுத்தமாகவும் சுகாதார முறைப்படியும் சலவை செய்து வழங்கப்பட வேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிட்டு பார்த்து, நோயின் தன்மைக்கேற்றவாறு என்னென்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது என்பதையும், பதிவேடுகளை பார்வையிட்டார்.
கண் பரிசோதனை செய்யபட்டு கண்ணாடிகள் வழங்கப்படுவதையும், கண் அறுவைச்சிகிச்சையின்போது மருத்துவர்கள் தனிகவனம் மேற்கொண்டு, நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்றவாறு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சித்த மருத்துவப்பிரிவில் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், மருத்துவமனை வளாகங்கள் மற்றும் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்தல், மருத்துவ அனுமதி சீட்டு வழங்குதல், நோயாளிகளின் தொடர் சிகிச்சை விவரங்கள் போன்றவை சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா எனவும், மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையின்றி வழங்கப்படுகின்றனவா எனவும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டுகளில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர், “இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் மருத்துவமனையில் நடைபெறும் அன்றாட செயல்பாடுகள் கண்காணிக்கபடுவதுடன் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மேலும், இந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் 20 நாட்கள் சேமிக்கப்பட்டிருக்கும், அதன் பின் தேவையெனில் பதிவுகளை தனியாக சேமித்து கொள்ளாம்” என்றும் கூறினார்.
இந்த ஆய்வின்போது நிலைய மருத்துவ அலுவலர் முருகப்பன், சித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
