government bus tire exploded as Passengers fear because of lost control ...

சிவகங்கை

சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் பயணிகள் அலறினர். நிலை தடுமாறிய பேருந்தை ஓட்டுநர் சாமர்த்தியமாக கட்டுக்குள் கொண்டுவந்தார்.

மதுரையில் இருந்து தொண்டி சென்றுக் கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து (பச-63 ச 1562) நேற்று மதியம் 2 மணியளவில், மதுரை - சிவகங்கை சாலையில் பில்லூர் விலக்கு அருகே வந்துக் கொண்டிருந்தது. 

அப்போது, பேருந்தின் டயர் திடீரென மிகுந்த சத்தத்தோடு வெடித்தது. சத்தத்தைக் கேட்டதும் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். 

நிலைதடுமாறிய வண்டி இட, வலதாக ஓடியது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

அதனையடுத்து, பேருந்து பயணிகள் வேறொரு பேருந்து வருவதற்காக அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். பின்னர், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தில் பயணிகள் ஏறிச் சென்றனர். 

அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.