கோவையில் அரசு பேருந்தின் பின்புறத்தில் 4 டயர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 டயர்களை மட்டும் வைத்து பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்குவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. சமீபத்தில் பொள்ளாச்சி அருகே பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, மேற்கூரையை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு அரசு பேருந்தின் பின்புறம் 4 டயர்கள் பொருத்தப்படுவதற்கு பதிலாக 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. வழக்கமாக பேருந்துகளின் பின்பகுதியில் எடையை தாங்கும் விதமாக பேருந்துகளின் பின் பகுதியில் 4 டயர்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவது வழக்கம். ஆனால் 2 டயர்களில் பேருந்து இயக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.