உளுந்தூர்பேட்டையில், உடைந்த குழாயை சீரமைக்கவும், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யவும் கோரியதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரசு பேருந்தைச் சிறைப்பிடித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நத்தாமூர் கிராமம். இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் திடீரென உடைந்து சேதமானது. இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் உடைந்த குழாயை சீரமைத்து, குடிநீர் விநியோகம் செய்து தரவெண்டும் என்று முறையிட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீரமைக்கவில்லை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உடைந்த குழாயை சீரமைக்கவும், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யவும் கோரி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நத்தாமூர் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்ட ஒரு அரசு நகர பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற கிராம மக்கள் காலை 7.30 மணிக்கு அரசு பேருந்தை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.