பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்படும்போது, நான்கு புதிய விதிகளை பின்பற்றுமாறு திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது..

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஒன்றியம், ஏர்வாடி கிராமத்தில் அரசு உதவி பெறும் எஸ்.வி.இந்து தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 16 ஆம் தேதி அன்று பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில், அதிக அளவில் சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க கல்வி இயக்குநர், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மழலையர், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடும்போது, நான்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

• பள்ளியில் கொண்டாடப்படும் ஆண்டு விழா மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

• விழாவின்போது, அதிக ஒலி கொண்ட ஒலி பெருக்கி மற்றும் அதிக ஒளிகொண்ட மின் விளக்குச் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. 

• விழா நடைபெறும் இடம், மாணவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும்.

• விழா நடைபெறும்முன், விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவுக்குப் பயன்படுத்தப்படும் ஒளி ஒலி சாதனங்கள் ஆகியன அமைத்தல் குறித்து முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட இந்த புதிய விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றும்படி மாவட்ட தொடக்க கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.