தமிழகத்தை சேர்ந்தவரும், அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும் பிரபல கண் மருத்துவருமான கோவிந்தப்பா வெங்கடேசாமியின் 
100-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வைத்து மரியாதை செய்துள்ளது. எட்டயபுரத்தில் உள்ள அனவ்டமலாபுரத்தில் பிறந்த மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி, பள்ளி படிப்புக்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்றார். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 

மருத்துவப் படிப்பு முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். பர்மா காடுகளில் அவர் பணியாற்றியபோது விஷ பூச்சி கடித்ததில் முடக்குவாத நோக்கு ஆளானார். இதன்பிறகு, தாய்நாடு திரும்பியவர் கண் மருத்துவம் பயின்று அந்த பிரிவில் சேவையாற்றி வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு, மதுரை அரசு மருத்துவமனையின் கண் மருத்துவ துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

 

மதுரையில் முதன் முதலாக 11 படுக்கை வசதியுடன் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கினார். கடந்த 2006 ஆம் ஆண்டு, ஜூலை 7 ஆம் தேதி அன்று மதுரையில் அவர் காலமானார். அரவிந்த் கண் மருத்துவமனை உலகளவில் பல்வேறு இடங்களில் சிறந்த மருத்துவமனையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி, பத்மஸ்ரீ விருதும், சர்வதேச அளவில் ஹெலன் கெல்லர் விருதும், பி.சி.ராய் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.