திருச்சி

பயிற்சிக்கான உபகரணங்கள் வாங்க நிதி உதவி இல்லாததால் அரசின் உதவி கிடைத்தால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வெல்வேன் என்று அர்ஜுனா விருது பெற்ற ஆரோக்கிய ராஜூவ் உருக்கமாகத் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி ஊராட்சி வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சௌந்தரராஜன் மகன் ஆரோக்கிய ராஜூவ். லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த இவர், ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்களை வரலாறு முதலாம் ஆண்டு படித்த ஆரோக்கிய ராஜூவ், இடையிலேயே படிப்பை விட்டு, 2010-ஆம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் கம்பெனியில் ஜூனியர் கமாண்டிங் ஆபிஸராக வேலைக்குச் சேர்ந்தார்.

பிறகு, தீவிர பயிற்சி பெற்று 2013-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்து, தென்கொரியா, டெல்லி போன்ற பகுதிகளில் நடைபெற்ற 400 மீ. தடகள போட்டியில் பங்கேற்று இதுவரை 10 தங்கங்கள், 6 வெள்ளிகள், 1 வெண்கலம் என பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இதனையொட்டி, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவருக்கு குடியரசுத் தலைவர் அர்ஜுனா விருதை வழங்கினார்.

விருதுப் பெற்ற ஆரோக்கிய ராஜூவ்-க்கு லால்குடியில் உள்ள கும்பகோணம் மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், புனித சூசையப்பர் ஆலய பங்குப் பேரவை, லால்குடி கத்தோலிக்க சங்கம், மரியாள் சேவை, இளைஞர் அணி போன்ற அமைப்புகள் இணைந்து பாராட்டி, பரிசுகளை வழங்கின.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆரோக்கிய ராஜூ, “ஏழ்மையான நிலை தான் என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது. 15 ஆண்டுகளாக தொடர் பயிற்சியின் மூலம் கிடைத்தது தான் இந்த வெற்றி.

பாட்டியாலா ரெஜிமென்டில் இருப்பதால், தட்பவெப்பநிலை உடலுக்கு ஒத்துப்போவதில்லை. அவ்வாறு பயிற்சி பெற சில உபகரணங்கள் வாங்க வேண்டும். அதற்கான நிதிநிலை என்னிடம் இல்லை.

அரசு உதவி செய்தால் முறையாகப் பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தமுறை இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன். அதுதான் எனது லட்சியமும் கூட” என்று அவர் கூறினார்.

இந்த விழாவில், புனித சூசையப்பர் பங்குதந்தை எம்.ஏ. தன்ராஜ், கும்பகோணம் மறைமாவட்ட எஸ்.சி, எஸ்.டி ஆணையச் செயலாளர் குழந்தைசாமி, மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர் எஸ்.எம்.பிச்சை, பங்குப் பேரவை துணைத் தலைவர் பி.எஸ்.ஜெ. லியோலாரன்ஸ், லால்குடி கத்தோலிக்க சங்கத் தலைவர் கே.அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.