துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஐபுரூஸ் (24) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று திரும்பினார்.

அவரது நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தபோது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 8 லேப்டாப்கள் இருந்தன. நம் நாட்டின் சட்ட விதிகளின்படி, வெளிநாட்டில் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள வைரஸ்களை, இங்குள்ள எலெக்டரானிக்ஸ் பொருட்களில் பரவி பெரும் விபரீதம் ஏற்படும் என கருதி, அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்வது வழக்கம். அதுபோல், ஐபுரூஸ் கொண்டு வந்த 9 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹2 லட்சம்.

ஆனாலும், அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் இருந்தது. இதையடுத்து அவரை, தனியறையில் வைத்து முழுவதுமாக சோதனை செய்தபோது, உள்ளாடையில் 66 கிராம் கொண்ட தங்க கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அவரது ஆசனவாயிலில் கருப்பு பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பார்சல் இருந்தது.

இதையடுத்து, அந்த பார்சலை எடுத்து பிரித்தனர். அதில், 119 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அந்த தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹6 லட்சம்.

இதையடுத்து அதிகாரிகள், ஐபுரூசை கைது செய்தனர்.