தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் 50 யார்ட் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்நீஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று தொடங்கியது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியை தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் டிஜிபி விஜயகுமார் போட்டிகளை நேற்று காலை தொடங்கிவைத்தார்.

இப்போட்டிகளில் வடக்கு, மத்தியம், மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள், தலைமையிடம், சென்னை பெருநகரம், ஆயுதப்படை, பெண்காவலர் என 8 அணி யினர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போட்டிகள் 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர் ஆகிய தொலைவுகளில் இருந்து இலக்கை நோக்கி ரைபிள், கார்பைன், ரிவால்வர், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளைக்கொண்டு நின்று சுடுதல், முழங்காலிட்டு சுடுதல், படுத்துக்கொண்டு சுடுதல், தோன்றிமறையும் இலக்கை சுடுதல் என பல்வேறு வகைகளில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் 50 யார்ட் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்நீஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான காவல் துறையினருக் கான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.