காங்கயம் அருகே, நள்ளிரவில் ஒன்பது ஆடுகள் திருடு போயின. தொடர்ச்சியாக, கால்நடைகள் திருட்டு போவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
காங்கயம், பகவதிபாளையத்தை சேர்ந்தவர் இராமசாமி. அவரது தோட்டத்தில், ஆடுகள் வளர்த்து வருகிறார். அவரது தோட்டத்து பட்டியில், ஒன்பது ஆடுகளை காணவில்லை. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஆடுகளை திருடிச் சென்றது தெரிந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கடந்த, இரண்டு நாளுக்கு முன், அதே பகுதியில் கிட்டுசாமி என்பவர் தோட்டத்திலும், ஆடுகள் திருட முயற்சி நடந்தது. சத்தம் கேட்டு கிட்டுசாமி எழுந்து வந்து பார்த்த போது, அவர்கள் தப்பினர். அதற்கு சில நாட்கள் முன், முத்தூர் அருகே, ஒரு தோட்டத்தில் இருந்த ஒன்பது மாடுகள் திருடு போயின.
காங்கயம், வெள்ளக்கோவில் சுற்றுப்பகுதிகளில், மீண்டும் கால் நடை திருட்டு துவங்கியிருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர் மத்தியில், பீதியை ஏற்படுத்தியுள்ளது.
