சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர்.

அப்போது மாலை 4 மணியளவில் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இரவு நேரத்தில் மீட்புப்பணிகளை தொடர முடியாததால், மீட்புப்பணி மீண்டும் காலையில் தொடங்கியது. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் என செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஏற்கனவே இம்மலைப்பகுதியில் பலமுறை இது போன்ற தீ ஏற்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இத்தீயைக் கட்டுப்படுத்தவோ, மலைப்பகுதியை பாதுகாக்கவோ உடனடி நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்களையும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும் வனப்பகுதியில், மலையில் தீ ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மலைக்குச் செல்பவர்கள் வனத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும், மலையேறச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை கொடுக்க வேண்டும், தேவையான முதலுதவி மருத்துவ உதவி கொடுக்கப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும், தேவையில்லாமல் இரவு நேரங்களில் தங்க அனுமதி அளிக்கக்கூடாது, தேவைப்பட்டால் தங்குவதற்கான பாதுகாப்பு அம்சங்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முக்கியமாக, மலைப்பகுதியில் தீ மூட்டி கவனக்குறைவாக இருப்பதாலும், சமூக விரோதிகளாலும், வெப்பம் அதிகமாவதாலும், எதிர்பாராமல் திடீரென்று தீ ஏற்படுவதற்கும் வழி வகைகள் உண்டு. இவற்றையெல்லாம் வனத்துறையினர் கவனத்தில் கொண்டு தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள், முதலுதவி ஏற்பாடுகள், மருத்துவ உதவிகள், தீயணைப்பு வண்டிகள், காவல் நிலையம், உதவியாளர்கள் என அனைத்து முன்னேற்பாடுகளையும் வனத்துறையினர் மேற்கொள்கின்றனரா என்பதை தமிழக அரசு தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.