Asianet News TamilAsianet News Tamil

வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராம மக்களின் தேவையை மேம்படுத்த கடனுதவிகள்…

giving loans-for-village-people-aroung-forest
Author
First Published Nov 30, 2016, 9:01 AM IST


அரூர்,

வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள சீலூத்துக்கொல்லை, கூத்தாடிப்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்களின் தேவையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த சுயஉதவிக் குழுக்களுக்கு, வனத்துறை சார்பில் ரூ.9.25 இலட்சம் கடனுதவிகளை வனத்துறை அலுவலர்கள் வழங்கினர்.

“மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக இருக்க வேண்டும்” என்பது தேசிய வனக் கொள்கை. தர்மபுரி மாவட்டத்தில் 40 சதவீத வனப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் தரத்தையும், பாதுகாப்பையும், வனப்பகுதியை மேம்படுத்துவதற்கும், வனப்பகுதியில் உள்ள விலங்குகளால் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு வனத்துறை மூலம் செயல்படுத்துகிறது.

அதன் ஒருபகுதியாக காட்டிற்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் தேவையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த அவர்களுக்கு சுலப தவணைகளில் கடன் வழங்கப்படுகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சீலூத்துக்கொல்லை கிராமத்தில் உள்ள 3 சுயஉதவிக் குழுக்களுக்கு கறவை மாடு, ஆடு, தையல் பணிகள் போன்ற சிறு தொழில்கள் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் திருமால், பாலக்கோடு வனச்சரக அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் 3 சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்திற்கான கடனுதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா உத்தரவின்பேரில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் அரூர் அருகே உள்ள கூத்தாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கான கடனுதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வனவர் வேடியப்பன் மற்றும் வனத்துறையினர், சுயஉதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios