கர்நாடகாவிலுள்ள காவேரி பாசனப் பகுதியில் வசிக்‍கும் மக்‍கள் தொகையின் அளவைவிட தமிழக டெல்டா பகுதியில் வசிக்‍கும் மக்‍கள் தொகை எண்ணிக்‍கை அதிகம் என்பதால் அதனைக்‍ கருத்தில்கொண்டு தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் இன்று வாதிடப்பட்டது.காவிரியிலிருந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தரக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழகஅரசின் சார்பில் வழக்‍கறிஞர் சேகர்நாப்தே ஆஜராகி வாதிட்டு வருகிறார். இந்த வழக்‍கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

காவேரி விவகாரத்தில் கர்நாடக அரசு நடுவர்மன்றத் தீர்ப்பை மதித்து நடக்‍கவில்லை என ஏற்கெனவே வாதிட்ட அவர், இன்றும் தொடர்ந்து பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

தமிழகத்தில் 34 சதவிகித சாகுபடி பரப்பளவு காவிரி படுகையில் அமைந்துள்ளது - கர்நாடகாவில் 18 சதவிகித சாகுபடி பரப்பளவு மட்டுமே அமைந்துள்ளது. மேலும் காவேரி படுகையில் வசிக்‍கும் மக்‍கள் தொகையின் எண்ணிக்‍கையைவிட தமிழகத்தின் காவேரி டெல்டா பகுதியில் வசிக்கும் மக்‍கள் தொகையின் எண்ணிக்‍கை அதிகம் என்று குறிப்பிட்ட நாப்தே, இதனைக்‍ கருத்தில்கொண்டு, காவேரியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்‍கப்பட வேண்டுமென கேட்டுக்‍கொண்டார்.

மேலும் கர்நாடக படுகையில் உள்ள நிலம் சாகுபடிக்‍கு ஏற்றதல்ல என வல்லுநர்கள் தெரிவித்திருப்பதால் அங்கு காவேரி நீர் வீணடிக்‍கப்படுவதாகவும் சுட்டிக்‍காட்டினார்.

இதுபோன்ற சூழலுக்‍கு மத்தியிலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர் வாதிட்டார்.