காதலி, ஆண் நண்பர்களுடன் காதலி பழகுவதாக சந்தேகம் கொண்ட காதலன், அவரை பிளேடால் சரமாரியாக அறுத்த சம்பவம் பல்லாவரத்தில் நடந்துள்ளது. 

சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும், சத்யபிரகாஷும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. 

இந்த நிலையில், சத்யபிரகாஷின் காதலி, மற்ற ஆண் நண்பர்களுடன் பழகுவதாக சந்தேகம் கொண்டுள்ளார். இது குறித்து காதலியை பலமுறை கண்டித்துள்ளார் சத்யபிரகாஷ்.  ஆனால், காதலி மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக அவர்களுக்கு கருத்து வேறுபாடு அதிகரித்து வந்துள்ளது. அவர்களுக்குள் இந்த விவகாரம் முற்றிய நிலையில், சத்யபிரகாஷ், காதலியுடன் பேசவேண்டும் என்று கூறி, கபல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்கா அருகே வரவழைத்துள்ளார்.

சத்யபிரகாஷ் கூறியதைக் கேட்டு அவரும், பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, சத்யபிரகாஷும், அவரது காதலியும் பிரச்சனை குறித்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்யபிரகாஷ், தான் கொண்டு வந்திருந்த பிளேடால், காதலியின் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட
இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார். இதில், அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து சத்யபிரகாஷை போலீசார் கைது செய்தனர். சத்யபிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.