புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று  பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த  கஸ்தூரி என்ற 17 வயது மாணவி லாஸ்பேட்டையில்  பிளஸ் ஒன் படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்  அந்த மாணவி வகுப்பு முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

தவளக்குப்பம் 4 முனை சந்திப்பு அருகே  வந்த போது மாணவியின் தந்தைக்கு அவசரமாக போன் வரவே அவர் தனது மகளை பஸ்சில் வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு சென்றார்.

ஆனால் அந்த மாணவி  கஸ்தூரி வீடு போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர்  உறவினர், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அந்த மாணவி இல்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மாணவியை பாகூர் அருகே ஆதிங்கம்பட்டு காலனியை சேர்ந்த தனகோடி  என்பவரது மகனான பஸ் டிரைவர் தமிழ்வாணன் சேலத்துக்கு கடத்தி சென்று தங்க வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கு கஸ்தூரியிடம்  ஆசைவார்த்தை கூறி தமிழ்வாணன் அவருடன்  பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சேலம் சென்ற போலீசார் மாணவி கஸ்தூரியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தமிழ்வாணனை கைது செய்தனர். தமிழ்வாணன் மீது கடத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.