காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, இளைஞர் ஒருவரின் சபலபுத்தியை பயன்படுத்தி அவரின் ஸ்கூட்டியை இளம் பெண் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை மணலியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இரு தினங்களுக்கு முன்  ஏழுகிணறு பகுதியில் தனது டியோ இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, இளம் பெண் ஒருவர் வழி மறித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தை நிறுத்திய தினேஷிடம் அந்த பெண், உடனடியாக அவரது வாகனத்தில் ஏறிக் கொண்டார். சிறிது தூரம் சென்ற பிறகு, சார் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, உங்கள் வாகனத்தை கொடுத்தால் நான் அவரை மருத்துவமனை அழைத்து சென்று விட்டு உடனே வந்து கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் பழகுவதற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணிய சந்தோஷமடைந்த தினேஷ், வாகனத்தை தர முன் வந்தார். தானும் கூட வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். 

ஆனால், அந்த இளம்பெண்ணோ, சார் ஒரு ஆணுடன் பைக்கில் சென்றால் எங்கள் ஏரியாவில் தப்பாக பேசுவார்கள் என்றுகூற அதற்கு ஆமோதித்த தினேஷ் செல்போன் நெம்பரை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார்.அரை மணி நேரத்தில் திரும்பி வருவதாக கூறிய அந்த பெண், அரை மணிநேரமல்ல 6 மணி நேரமாகியும் திரும்பவில்லை. அவரது போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வெகு நேரமாகியும் அந்த இளம் பெண் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ், ஏழுகிணறு போலீஸில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், போன்நம்பரை வைத்து டிராக் செய்தனர். அந்த பெண்ணின் செல்போன் நெம்பர் தடா பகுதியைக் காட்டியுள்ளது. சில மணி நேரத்தில் அந்த இளம் பெண் சென்ற வாகனம் சென்னையின் எல்லைப் பகுதிக்குள் வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்தபோது, இளம்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இரு சக்கர வாகனத்தில் உடன் வந்தவரை காட்டி, இவர் என் காதலர். இவருக்கு இன்றுபிறந்தநாள். அதை ஜாலியாக கொண்டாட முடிவு செய்தோம். அதற்காக தடா நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தோம். என் தோழியிடம் இருசக்கர வாகனம் வாங்கிவருவதாக என் காதலிரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.எப்படியாவது காதலரை சந்திக்க வேண்டும் என்பதால், தினேஷை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார். பின்னர், வாகனத்தை மீட்டு தினேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர். தினேஷ் கேட்டுக் கொண்டதன் பேரில், இளம் பெண்ணையும் அவரது காதலனையும் தண்டிக்காமல் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷூக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.