Getting 125 passports a problem

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று சென்னையில் இளைஞர்கள் பொதுவாக பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் போன்ற இடங்களில் அதிக அளவில் பைக் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பைக் ரேஸ் நடத்தப்படுவதால், பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

இதனை தடுக்கும் விதத்தல், சென்னை போக்குவரத்து காவல் துறை இரு தினங்களுக்கு முன்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இனி புத்தாண்டு தினத்தில் பைக் ரேசில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று அளிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று வழங்கப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டை விபத்தில்லாமல் கொண்டாட வேண்டும் என்பதே காவல் துறையின் இலக்கு என்று சென்னை போக்குவரத்து காவல் துறை கூறியிருந்தது.

நேற்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகர போக்குவரதது காவல் துறை இணை ஆணையர் அருண் கூறியுள்ளார்.

நேற்று புத்தாண்டு தினம் நள்ளிரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாஸ்போர்ட் பெற காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.