Gayathri Raghuram: நீயா? நானா? பார்ப்போம்! அண்ணாமலைக்கு சவால் விடும் காயத்ரி ரகுராம்!
ஈரோடு இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்துத் தானும் போட்டியிடுவேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து செயல்பட்டுவந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் அண்மையில் பாஜகவிலிருந்து விலகினார். அண்ணாமலையின் தலைமையில் தமிழக பாஜக பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து அவர் அண்ணாமலைக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட் காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துத் தானும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்
"ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று தன் ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்." எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.